சித்தன்னவாசல் என்பது துறவிகள் இருப்பிடம் எனப்பொருள்படும். இந்தியாவின் மாநிலமான தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மருவி சித்தன்னவாசல் என்று ஆயிற்று. புதுக்கோட்டைக்கு அருகில் நாரத்தமலை புகைவண்டி நிலையத்திலிருந்து 3.2km தொலைவில் உள்ள இந்த சிறிய மலை மீது ஏறிச் சென்றால் ஓவியங்கள் தீட்டப்பட்ட குகைக் கோயிலைக் காணலாம். இங்கு காணத்தக்கவை நான்கு: உருவச்சிலைகள், நடனமாதர் ஓவியங்கள், அரசன், அரசி ஓவியங்கள் என்பன.
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி. 7 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள் சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வடபகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இவ் ஓவியங்கள் 1000 - 2000 ஆண்டுகள் பழைமையனவை. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் படுக்கையும் தவம் செய்யும் இடமும், , பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன. சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப் பட்டம் என்ற இடத்தில் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்கு உள்ளது.