26 December 2009

இது மேகம் சுரந்த பாடல்



தற்பாதுகாப்பு கருதி

சூழலுக்கேற்ப நிறம் மாறும்

பச்சோந்தி போல்

சில நிமிட வேளையில்

உரு மாறும் உன்னை

எத்தனை முறை கேட்டிருப்பேன்

மேகமே! ஏன் அடிக்கடி

உரு மாறுகிறாய் என்று........


அத்தனை மௌனமும் இன்று

மொத்தமாய் வெளிப்படுகிறது

கை கோர்த்து

மேகமே! நீ

ஒன்று சேர்ந்தது

கூடியிருந்து பாட நினைத்துவிட்ட -இந்த

ஒப்பாரிப் பாடலுக்காய்த்தானா !


வடக்கிலங்கையில்

உதிரத்தை வியர்வையாக்கி

உழுது களைத்து

விண்ணை நோக்கி

உன்னை ஆனந்தக் கண்ணீராய்

அனுபவிக்கத் துடித்த

உழவர்களின் விளை நிலம் - இன்று

தரிசாகியதே!


தரிசு நிலத்தில்

படிந்து கிடக்கும்

இரத்தக் கறையை கழுவிட

மேகமே!

நீ சுரந்த இந்த சோகப்பாடல்

போதும் என்று

நினைத்து விட்டாயோ?

தோற்றுவிடுவாய் !


விண்ணை விட்டு நீங்கும் தாரகைகள்

மண்ணில் வீழ்ந்து விட்ட ஈரம்

காய்ந்துவிடும் ஓர்நாள் !

பிள்ளைகளின் பிரிவினையை நினைத்து

உருகும் தாயின் கண்ணீர்!

கணவனை இழந்து தவிக்கும்

மாதரின் கண்ணீர் !

பெற்றவர்களை இழந்து தவிக்கும்

பிள்ளைகளின் கண்ணீர் !

எப்போது காயும் யாரறிவர்?


உன் கண்ணீர்த் தாரகைகள்

கண்டு கதிகலங்கும்

விருட்சங்கள் கூட

கண்ணீர் சிந்துகின்றனவே!

ஒரு மானிடனின் கண்ணீர்

ஏன்?

இன்னோர் மானிடனின்

மனதை  வாட்டுவதில்லை???


மேகமே!

மின்னலாய்  வெளிப்படும்

உன் விம்மலும்,

இடியாய் நீ

முழங்கிடும் கதறலும்

சுதந்திர அன்னையின் துயிலைத்

தட்டி எழுப்பிடுமா?


என்றோ ஒரு நாள்

விடிவு வரும்!!!!

நம்பிக்கையுடனிரு

அன்றைய தினம்

மேகமே!சுரந்திடு

உன்

சுதந்திரப் பாடலை ...














4 comments:

  1. மேகம் சுரந்த பாடல் அருமை !
    அழுத்தமான வரிகள் தங்களின் கவிதைக்கு கூடுதல் பலம்.
    மேலும் தொடர என் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. நன்றி பிருந்தா!

    ReplyDelete
  3. பாடல் அருமைங்க!! மேலும் எதிர்பார்க்கிறேன்!!

    ReplyDelete
  4. Nanraga erukkirathu....melum niraiya eluthngal!!!!

    ReplyDelete